கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கானானிய ஸ்திரீக்கு பிரதியுத்தரமாக, “ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடியே உனக்கு ஆகக்கடவது” என்றார். இந்தச் சம்பவத்தை மத்தேயு 15-ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.
விசுவாசத்தின் அளவைக் கொண்டு கடிந்துகொள்வதும், மெச்சிக்கொள்வதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழக்கமாக இருந்தது. விசுவாசத்தின் அளவு குறைவாக இருந்தால், “அற்ப விசுவாசியே” என்று கடிந்துகொள்வார். அதே நேரத்தில், யாருடைய விசுவாசத்தின் அளவு அதிகமாக இருந்ததோ, அவர்களைப் பார்த்து “உன் விசுவாசம் பெரிது” என்று மெச்சிக்கொள்வார்.
அன்றைய நாட்களில் சீஷர்களின் விசுவாசம் குறைவாக இருந்தது. அவர்களைப் பார்த்து “அற்ப விசுவாசியே” என்று கடிந்துகொண்டார். ஆனால் இந்த ஸ்திரீயின் விசுவாசம் பெரிதாக இருந்தது என்று சாட்சி கொடுத்தார்.
இந்த தீர்க்கதரிசனச் செய்தியில், அந்த ஸ்திரீயின் விசுவாசம் பெரிது என்று சாட்சி பெறக் காரணம் என்ன என்பதையும், நம்முடைய விசுவாசமும் பெரிது என்று எவ்வாறு சாட்சி பெற முடியும் என்பதையும் பரிசுத்த வேதவசனங்களிலிருந்து ஆராய்ந்து பார்க்கலாம்.
ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசுவார். நிச்சயமாக அற்புதங்கள் நடக்கும்.
தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளில் குடியிருந்தவள் இந்த கானானிய ஸ்திரீ. இவளுடைய மகள் பிசாசினால் கொடிய வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது அந்தத் திசைகளுக்கு நேராக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து புறப்பட்டுச் சென்றார்.
அதைக் கேள்விப்பட்ட அந்த கானானிய ஸ்திரீ அவரிடத்தில் வந்து, “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்; என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகின்றாள்” என்று சொல்லி கூப்பிட்டாள்.
ஆனால் அவர் அவளுக்குப் பதிலாக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. இருந்தாலும் அவள் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து வந்து கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள். அவருடைய சீஷர்களே பரிதாபப்பட்டு, “இவளை அனுப்பிவிடும்” என்று வேண்டிக்கொள்ளும் அளவிற்கு அவள் தொடர்ந்து வந்தாள்.
அதற்கு கர்த்தராகிய இயேசு, “இஸ்ரவேல் வீட்டாரின் காணாமல் போன ஆடுகளிடத்திற்கே அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றபடி வேறொருவரிடத்திற்கும் அல்ல” என்று பதிலளித்தார்.
அதாவது, இவள் கானான் தேசத்தைச் சேர்ந்தவள். ஆனால், “நான் இஸ்ரவேல் மக்களுக்கே அனுப்பப்பட்டவன்” என்ற அர்த்தத்தில் கூறினார்.
அப்படியானால், வேறு மக்களுக்காக அனுப்பப்படவில்லையா? என்று யோசிக்கத் தோன்றும். இங்குதான் மிக ஆழமான இரகசியங்கள் அடங்கியுள்ளன.
உலக மக்களின் இரட்சிப்புக்காக வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, கிருபையின் காலத்தில் அல்ல, நியாயப்பிரமாணக் காலத்தில்தான் இந்தப் பூமியில் மனுஷகுமாரனாகப் பிறந்தார். அவர் வளர்ந்ததும், ஊழியம் செய்ததும் நியாயப்பிரமாணக் காலத்தில்தான். இந்த சம்பவம் நடந்ததும் நியாயப்பிரமாணக் காலத்தில்தான்.
அந்த நாட்களில் வனாந்தரத்தில் நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தபோது, பிசாசு மூன்று மிக பெரிய சோதனைகளைக் கொண்டு வந்தான். அவை அனைத்திலும் அவர் ஜெயமடைந்தார். இதனால் யூதர்களின் இராஜாவாக உயர்த்தப்பட்டார்.
ஆதலால், அந்தக் காலத்தில் அவருக்கு இஸ்ரவேல் மக்கள்மீது மட்டுமே அதிகாரம் இருந்தது. இதனால், அவர்களுடைய பாவங்களை மட்டும் மன்னிக்கவும், அவர்களுடைய வியாதிகளைச் மட்டும் சுகமாக்கவும் அதிகாரம் இருந்தது.
இந்நிலையில், அவரிடத்தில் தன்னுடைய மகளுக்காக விண்ணப்பம் செய்தவள் கானான் தேசத்தைச் சேர்ந்த ஸ்திரீ. எனவே, அந்தக் காலத்தின் ஒழுங்கின்படி அவளின் பாவங்களை மன்னிக்கவோ, சுகம் கொடுக்கவோ முடியாது. அதற்கு அதிகாரமும் இல்லை. ஆதலால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருடைய விண்ணப்பத்தை கேட்கவுமில்லை அவளுடைய மகளுக்கு இரங்கவும் இல்லை.
அவள் அருகில் வந்து, “ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும்” என்று பணிந்துகொண்டாள். அதற்கு அவர், “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்ல” என்றார்.
அதாவது, இஸ்ரவேல் மக்களுக்குரிய ஆசீர்வாதத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பது அந்தக் காலத்தின் ஒழுங்கல்ல என்பதே அதின் பொருள்.
இதைக் கேட்ட அவள் கூறிய வார்த்தைகள்தான் அவளுடைய விசுவாசம் பெரிது என்று சாட்சி கிடைக்கச் செய்தது.
அவள், “மெய்தான் ஆண்டவரே; ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே” என்றாள்.
இந்த வார்த்தைகளின் பொருளை ஆராய்ந்து பார்த்தால், அவள் கிருபையின் காலத்தைப் பற்றிப் பேசுகிறாள் என்பது தெளிவாகிறது.
அதாவது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முதலில் இஸ்ரவேல் மக்களுக்காக மாத்திரமே மேசியாவாக அனுப்பப்படுவார். ஆனால் அவர்கள் அவரை விசுவாசிக்காமலும் ஏற்றுக்கொள்ளாமலும், சிலுவையில் அறையப்படுவதற்காக புறஜாதியாரின் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள். இதன் மூலம் தங்களுக்குக் கிடைத்திருந்த இரட்சிப்பின் சிறப்பான வாய்ப்பைத் தவறவிடுவார்கள்.
பின்னர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் பிசாசின் தலையை நசுக்கி ஜெயமடைந்து, உலக மக்களை இரட்சிக்கும் மேசியாவாக வெளிப்படுவார். இதனால் புறஜாதிகளுக்கும் இரட்சிப்பின் வாசல் திறக்கப்படும். அவர் உலக மக்கள் அனைவருக்கும் இரட்சகராகவும் மேசியாவாகவும் இருப்பார்.
அபாத்திரராகக் கருதப்பட்ட புறஜாதிகளில் யார் அவரை கிறிஸ்துவாகவும் இரட்சகராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் அந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். மேலும், அவரை ஏற்றுக்கொள்ளும் அனைவருடைய பாவங்களையும் அவர் மன்னித்து, அவர்களுடைய வியாதிகளைச் சுகமாக்குவார்.
நியாயப்பிரமாணக் காலத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் மேசியாவாக வெளிப்பட்டவர், கிருபையின் காலத்தில் உலக மக்கள் அனைவருக்கும் மேசியாவாக இருப்பார் என்பதை அந்த ஸ்திரீ விசுவாசத்தோடு அறிக்கையிட்டாள்.
நியாயப்பிரமாணக் காலத்தில் வாழ்ந்த அவளுக்கு, கிருபையின் காலத்தைப் பற்றிய வெளிப்பாடு கிடைத்தது. இது காலங்களைக் கடந்த வெளிப்பாடாகும்.
எனவேதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “உன் விசுவாசம் பெரிது” என்று சாட்சி கொடுத்து அற்புதத்தைச் செய்தார். அவளும் அந்த அற்புதத்தைப் பெற்றுக்கொண்டாள்.
காலங்களைக் கடந்த விசுவாசம் பெரிய விசுவாசமாகும். அது சீக்கிரத்தில் அற்புதங்களைக் கொண்டு வரும். விசுவாசத்தினைக்குறித்த சாட்சிகளையும் கொண்டுவரும்.
இன்றைய நாட்களில் நாம் கிருபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்குப் பின்பு உபத்திரவ காலம், மகா உபத்திரவ காலம், ஆயிரம் வருட அரசாட்சி, வெள்ளைச் சிங்காசன நியாயத்தீர்ப்பு போன்ற காலங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறித்து வேதாகம வெளிப்பாடுகளைப் பெற்று, தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்தால், இன்றும் அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
Share this content:










