அற்புதத்தைத் தடுக்கும் மறைவான கட்டுகள்

      கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் ஊழியம் செய்த நாட்களில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு புசிக்கக் கொடுத்தார். இது ஒரு மிகப்பெரிய அற்புதமாகும்.

 இது நடந்த பின்பு, அந்த இடத்திலிருந்து ஜனங்களை அனுப்பிவிட்டார். தம்முடைய சீஷர்களையும் படகில் ஏறி தமக்கு முன்னே அக்கரைக்குப் போகுமாறு துரிதப்படுத்தினார். ஜனங்களும் சீஷர்களும் சென்றார்கள். பின்பு, ஒரு மலையின் மேல் ஏறி தனிமையாக ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார். அது ஒரு சாயங்கால நேரமாக இருந்தது. (மத்தேயு 14)

  சீஷர்கள் சென்ற படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தது. அங்கு எதிர்க்காற்று ஏற்பட்டு, பெரிய பெரிய அலைகள் எழுந்தன. அவை படகின் மீது மோதி அதனை அசைத்தன. இதனால் சீஷர்கள் படகை தொடர்ந்து இயக்குவதில் (துடுப்புப் போடுவதில்) கஷ்டப்பட்டார்கள். அலைகளை எதிர்த்து படகைச் செலுத்துவது கஷ்டமான ஒன்றாகும்.

 மலையில் ஜெபத்தில் இருந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, சீஷர்களின் வருத்தத்தைக் கண்டார். அவர்களைப் பாதுகாக்க, அவர் இருந்த இடத்திலிருந்து கடலின் மீது நடந்து அவர்களிடத்தில் வந்தார். அது இரவின் நான்காம் ஜாமமாக இருந்தது. அதிகாலை மூன்று மணி முதல் ஆறு மணி வரையிலான நேரமே இரவின் நான்காம் ஜாமம் ஆகும்.கிட்டத்தட்ட சாயங்காலம் முதல் அதிகாலை மூன்று மணி வரைக்கும் ஜெபத்தில்தான் இருந்தார். அலைகளின் நிமித்தம் சீஷர்கள் படும் வருத்தத்தைக் கண்டவுடனே, அதற்காக ஜெபித்தாலே அற்புதம் நடந்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படி ஜெபிக்காமல் கடலின் மீது நடந்து வந்தார்.

 ஜெபிக்காமல், அவர்களைக் காப்பாற்றுவதற்காக கடலின் மீது ஏன் நடந்து வர வேண்டும்? ஜெபித்த இடத்திலிருந்தே, “இரையாதே, அமைதலாயிரு” என்று சொன்னாலே போதும்; அற்புதம் நடந்திருக்குமே! ஆனால், அவர்கள் இருந்த படகில் அவர் ஏறியவுடனே காற்று அமர்ந்ததே. இதற்கான காரணங்கள் என்ன?

 இன்றைய நாட்களில் தேவனுடைய பிள்ளைகளில் அநேகர் கஷ்டங்களின் மத்தியில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய கஷ்டங்களையெல்லாம் பரலோக தேவன் காண்கின்றார். நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகின்றார். வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக விண்ணப்பம் செய்கின்றார். ஆனாலும், அற்புதங்கள் நடக்காமல் இருப்பது ஏன்? இதற்கான காரணங்கள் என்ன? இதில் மறைந்திருக்கும் ஆழ்ந்த இரகசியங்கள் என்ன?

   இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தச் செய்தியில் விரிவாக தியானிக்கப் போகின்றோம். இது மிகவும் ஆழமான, கருத்தாழமிக்க சத்தியமாகும். இதைப் பரிசுத்த ஆவியானவரே நமக்கு விளங்கச் செய்ய வேண்டும். எனவே, ஆவியில் நிறைந்து ஜெபித்துவிட்டு இதை வாசியுங்கள். அப்போது இதில் மறைந்திருக்கும் ஆழ்ந்த இரகசியங்களை அறிந்துகொண்டு, தேவன் வைத்திருக்கும் அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வீர்கள்.

    இதேபோல் முன்பும் ஒரு சம்பவம் நடந்தது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “அக்கரைக்குப் போவோம், வாருங்கள்” என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். உடனே அவர்கள் அவரோடு கூட படகில் ஏறினார்கள். அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாயிற்று. இதனால் பெரிய அலைகள் எழுந்து படகின் மீது மோதின. படகு நிரம்பத்தக்கதாக அதற்குள் தண்ணீரும் புகுந்தது. சீஷர்கள் பயந்து அலறினார்கள். தூக்கத்தில் இருந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எழுப்பி, தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை விளக்கிக் கூறினார்கள்.

  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து காற்றையும் கடலையும் கடிந்து, “இரையாதே, அமைதலாயிரு” என்று சொன்னார். உடனே காற்று நின்றது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. படகிற்கும் ஒரு சேதமும் இல்லாமல் அவர்கள் அக்கரைக்குச் சென்றார்கள். இந்த அற்புதத்தை சீஷர்கள் தங்கள் சொந்தக் கண்களால் கண்டார்கள். அவர்கள் ஆச்சரியப்படத்தக்க அளவிற்கு இது மிகப்பெரிய அற்புதமாக இருந்தது. (மத்தேயு 8)

இந்த அற்புதத்தை அனுபவித்து ருசித்த சீஷர்களுக்கு, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து படகில் இருந்தால் போதும்; எப்படிப்பட்ட காற்று அடித்தாலும், அலைகள் வந்தாலும் ஜெயம் பெற்றுவிடலாம்” என்ற நம்பிக்கை அவர்களுக்குள் உருவானது. அது அசைக்க முடியாத ஆழமான நம்பிக்கையாக மாறியது. நாளடைவில் அந்த நம்பிக்கை தவறான புரிதலாக மாறி, ஒரு நூதனமான கட்டாக அவர்களுடைய உள்ளத்தில் பதிந்துவிட்டது. பாவக்கட்டு, சாபக்கட்டு, மாந்திரீகக்கட்டு போன்றவற்றைப் போல இதுவும் ஒரு கட்டாகவே மாறிவிட்டது.

    இரண்டாவது முறையாக சீஷர்கள் மட்டும் படகில் தனியாகச் செல்கின்றார்கள். அப்பொழுது எதிர்க்காற்று எழுகிறது. பலத்த அலைகள் ஏற்படுகின்றன. படகும் அதனால் அலைக்கழிக்கப்படுகிறது. சீஷர்களும் படகைச் செலுத்த மிகவும் வருத்தப்படுகின்றார்கள். அந்த நேரத்தில், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து படகில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. அவர் இப்போது நம்மோடு இல்லை. எனவே, அற்புதம் நடக்காது; படகு கடலில் மூழ்கி நாம் அழிந்துவிடுவோம்” என்று அவர்கள் ஆழமாக எண்ணினார்கள். இவ்வாறு அவர்களுடைய இருதயம் கடினப்பட்டது.

 பொதுவாக இருதயக் கடினம் அவிசுவாசத்தை உருவாக்குகிறது. அது அற்புதங்களையும், பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளையும், ஜெபத்திற்கான பதில்களையும் தடுக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தூரத்திலிருந்து ஜெபித்திருந்தாலும், அவர்களுடைய இருதயக் கடினம் அற்புதத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தடையாக இருந்திருக்கலாம். இதனால் படகு கடலில் மூழ்கி, சீஷர்கள் அழிந்துபோகும் அபாயம் இருந்தது.

அதனால்தான், அவர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுடைய இருதயக் கடினத்தை உடைப்பதற்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கடலின் மீது நடந்து வந்து சீஷர்களுடைய படகில் ஏறினார். அவர் படகில் ஏறியவுடனே அவர்களுடைய இருதயக் கடினம் உடைக்கப்பட்டது. உடனே காற்று அமர்ந்தது. அவர்கள் பாதுகாப்பாகத் தாங்கள் செல்கின்ற கரையை அடைந்தார்கள்.

  நாம் ஆராதிக்கின்ற தேவன் சர்வவல்லவர். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், எந்த இடமாக இருந்தாலும், அவர் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்ய வல்லவர் என்பதை ஆழ்ந்த தெளிவான புத்தியுடனும் உறுதியான விசுவாசத்துடனும் நம்ப வேண்டும். மாறாக, “இப்படி இருந்தால்தான் தேவன் அற்புதம் செய்வார்”, “இந்தச் சூழ்நிலையில் மட்டும்தான் அற்புதம் நடக்கும்” என்று குறுகிய மனப்பான்மைக்கு இடம் கொடுத்து அதை விசுவாசித்தால், அது தவறான விசுவாசமாக மாறிவிடும். இத்தகைய எண்ணங்கள் இருதயக் கடினத்தை உருவாக்கி, பரலோக தேவன் செய்ய விரும்பும் அற்புதங்களையும் அதிசயங்களையும் பெற்றுக்கொள்வதற்கு தடையாக அமையும்.

     எனவே, தேவனுடைய வல்லமைக்கு எல்லைகள் இல்லை என்பதையும், அவர் எந்த சூழ்நிலையிலும் கிரியை செய்ய வல்லவர் என்பதையும் முழு இருதயத்தோடு விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது தேவன் நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய மகிமையான கிரியைகளை வெளிப்படுத்துவார்.

Share this content:

error: Content is protected !!