எந்த ஒரு மனிதனும் பரிசுத்தமில்லாமல் பரலோக தேவனைத் தரிசிக்க முடியாது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (எபிரேயர் 12:14). இதனால்தான், “பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” என்று ஆலோசனை வழங்கப்படுகிறது (வெளிப்படுத்துதல் 22:11).
இந்த வேதாகம வசனங்களுக்கு ஒப்புக்கொடுத்து, பரிசுத்த வாழ்க்கைக்கு நம்மை அர்ப்பணித்து, “எப்படி பரிசுத்தமாக வாழலாம்?” என்று வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்தால், “நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” என்று லேவியராகமம் 20:8-ல் தேவன் கூறுவதை அறிய முடிகிறது.
இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பது பரலோகப் பிதாவின் சித்தமாகும். ஆனால், அதனை நமது சொந்த ஞானத்தினாலும், அறிவினாலும், பெலத்தினாலும் அடைய முயற்சிக்காமல், தேவனுடைய கிருபையை நாடி, நம்மை முழுமையாக அவருடைய கரங்களில் ஒப்புக்கொடுக்க வேண்டும். ஏனெனில், நம்மிடத்தில் பரிசுத்தத்தை விரும்புகிற அவரே, நம்மைப் பரிசுத்தமாக மாற்றுகிற தேவனாகவும் இருக்கிறார்.
அப்படியானால், தேவன் எவ்வாறு நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறார்? நம்மைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன் அளிக்கும் பரலோகப் பரிசுத்தத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? என்று தியானித்துப் பார்த்தால், அதற்கான முக்கியமான வழி தேவசமூகம் என்பதே தெளிவாகிறது. நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம், சிந்தனைகள், உணர்ச்சிகள், விருப்பங்கள் ஆகிய அனைத்தையும் பரிசுத்தப்படுத்துகின்ற இடம் தேவசமூகம் மட்டுமே ஆகும்.
தேவனுடைய சமூகத்தில் பாடித் துதிக்கும்போதும், ஆராதனையினால் அவருடைய நாமத்தை உயர்த்தும்போதும், பரிசுத்த வேதாகமத்தை வாசித்து தியானிக்கும்போதும், விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் ஏறெடுக்கும்போதும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வல்லமையாகக் கிரியை செய்கிறார். அந்த நேரங்களில் அவர் நம்மை மேலும் மேலும் பரிசுத்தப்படுத்தி, பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தமடையச் செய்கிறார்.
ஒரு மனிதன் தேவசமூகத்தில் அதிக நேரம் காத்திருக்கும்போது, பரிசுத்தமான வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வது நிச்சயம். மேலும், அவன் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், உலக வாழ்க்கையிலும் வெற்றியோடு வாழ்வதும் உறுதி.
இத்தகைய தேவசமூகத்தின் நன்மைகளையும், அதில் மறைந்திருக்கும் ஆசீர்வாதங்களின் இரகசியத்தையும் அறிந்த பிசாசு, தேவனுடைய பிள்ளைகள் நீண்ட நேரம் தேவசமூகத்தில் காத்திருக்க அனுமதிக்க விரும்புவதில்லை. தேவசமூகத்திலிருந்து அவர்களை விலக்கி, வெளியே துரத்துவதே அவனுடைய முக்கியமான தந்திரமும் நோக்கமும் ஆகும்.
புதிதாக இரட்சிக்கப்பட்டு, ஆண்டவரைப் பற்றி அறிந்துகொண்டவர்கள் தேவசமூகத்திற்குள் ஜெபிக்கச் செல்லும்போது, பிசாசு உடனடியாக கனநித்திரை, தூக்கம், கவனச்சிதறல், அசதி, வெறுமை, குழப்பம் போன்றவற்றைக் கொண்டு வந்து அவர்களைத் தடுமாறச் செய்ய முயற்சிப்பான். சிலர், “என்ன ஆனாலும் பரவாயில்லை” என்று உறுதியுடன் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ தேவசமூகத்தில் காத்திருப்பார்கள். ஆனால், அநேகர் பிசாசின் தூண்டுதலுக்கு இடம்கொடுத்து, தேவசமூகத்தை விட்டு எழுந்து வெளியேறிவிடுவார்கள். இதன் விளைவாக, அந்த நாளுக்குரிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், தேவன் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தியிருந்த பரிசுத்தத்தின் கிரியையையும் இழந்துவிடுவார்கள்.
ஏற்கனவே பரலோக தேவனை அறிந்து, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றவர்கள் தேவசமூகத்திற்குள் செல்லும்போது, இப்படிப்பட்ட தடைகள் உடனடியாக வருவதில்லை. ஆரம்பத்தில் அவர்கள் உற்சாகமாக ஜெபித்து, தேவசமூகத்தின் இனிமையை அனுபவிப்பார்கள். ஆனால், ஆவியாகிய தேவன் அவர்களோடு ஆழமாக இடைப்படத் தொடங்கி, அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் கிரியையை ஆரம்பிக்கும் நேரத்தில், பிசாசு பசி, தூக்கம், வெறுமை, கவலை, அசதி போன்ற பலவீனமான உணர்வுகளை எழுப்புவான். மேலும், “போதும்… அதிக நேரம் ஜெபித்துவிட்டாய்; இப்போது எழுந்து செல்” என்ற எண்ணங்களைச் சிந்தனையாகக் கொண்டு வருவான். அந்த எண்ணங்களுக்கு செவிகொடுத்து, தேவசமூகத்தை விட்டு வெளியேறினால், தேவன் கொடுக்க நினைத்திருந்த ஆசீர்வாதங்களை இழந்து, பின்னர் பாவத்தின் சோதனைகளில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
ஆவிக்குரிய வாழ்க்கையில் முதிர்ச்சி அடைந்து, ஊழியம் செய்கின்ற தேவனுடைய பிள்ளைகள் தேவசமூகத்தில் பல மணி நேரம் அமர்ந்து உற்சாகமாக ஜெபிப்பார்கள். அவர்கள் பரலோக அனுபவங்களை உணர்வார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு பேசும் சத்தத்தைக் கேட்பார்கள். அவர் பேச, இவர்கள் கேட்பார்கள்; இவர்கள் பேச, அவர் கேட்பார். இவ்வாறு தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் இடையே பரிசுத்தமான ஆவிக்குரிய உரையாடல் நடைபெறும்.
ஆனால், இந்த ஐக்கியம் முழுமையடைவதற்கு முன்பாகவே, பிசாசு கவனச்சிதறல், பசி, தூக்கம், அசதி, நிர்விசாரம் போன்றவற்றைக் கொண்டு வந்து அவர்களைத் திசைதிருப்ப முயற்சிப்பான். அந்தத் தூண்டுதல்களுக்கு செவிகொடுத்து தேவசமூகத்தை விட்டு வெளியேறினால், தேவன் அவர்களுக்காக வைத்திருந்த முழுமையான திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். அதன் விளைவாக, தேவத்திட்டத்தை ஓரளவும், சுயதிட்டத்தை ஓரளவும் பின்பற்றும் நிலை உருவாகும். இறுதியில், ஊழியத்தில் முழுமையான வெற்றியை அனுபவிக்காமல், பாதி வெற்றியையும் பாதி தோல்வியையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
தேவனுடைய பிள்ளைகள் தேவசமூகத்தில் நிலைத்திருந்து காத்திருக்கக் கூடாதபடிக்கு, பிசாசு பல தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். அந்தத் தந்திரங்களை அறிந்து, அவற்றை உணர்ந்து, வேதாகமத்தின்படி விழிப்புடன் செயல்படும்போது, சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடித்து ஜெயிக்க முடியும்.
எனவே, தேவசமூகத்திலிருந்து தேவனுடைய பிள்ளைகளை விலக்க முயற்சிக்கும் பிசாசின் தந்திரங்களை அறிந்து, அவற்றை ஜெயிக்க உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும். அதற்காக முழுமனதோடு தேவனுக்குக் கீழ்ப்படிந்து, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
எப்படி ஜெயம் பெறுவது?
1.ஜெப நேரத்தை முன்கூட்டியே தீர்மானியுங்கள்:
தேவசமூகத்திற்குள் எந்த நேரத்தில் செல்ல வேண்டும்? எப்போது வெளியே வர வேண்டும்? எவ்வளவு நேரம் தேவசமூகத்தில் காத்திருக்க வேண்டும்? என்பதனை முன்கூட்டியே திட்டமிட்டு உறுதியாகத் தீர்மானிக்க வேண்டும்.
2.தீர்மானித்த நேரத்தைக் கடைப்பிடியுங்கள்:
குறித்த நேரத்திற்கு சரியாக தேவசமூகத்திற்குள் செல்ல வேண்டும். தீர்மானித்த நேரம் முடியும் வரை அங்கே நிலைத்திருந்து, அந்த நேரம் நிறைவடைந்த பின்னரே வெளியே வர வேண்டும்.
3.உறுதியான மனநிலையுடன் இருங்கள்:
தீர்மானித்த நேரம் முடிவதற்கு முன், எந்தக் காரணத்திற்காகவும் தேவசமூகத்தை விட்டு வெளியே வரமாட்டேன் என்ற உறுதியான தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
4.மொபைல் போனை அணைத்துவையுங்கள்:
தேவசமூகத்திற்குள் செல்லும்போது மொபைல் போனை முழுமையாக Switch Off செய்ய வேண்டும். Silent Mode-இல் மட்டும் வைப்பது போதுமானதல்ல. இயன்றால், மொபைல் போனை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு தேவசமூகத்திற்குள் செல்வது சிறந்தது.
5.சமூக ஊடகங்களைத் தவிருங்கள்:
தேவசமூகத்தில் இருக்கும் நேரத்தில் சமூக ஊடகங்களை முற்றிலும் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக WhatsApp, Facebook, மற்றும் பிற Messenger செயலிகளைத் தவிர்க்க வேண்டும். தேவசமூகத்திற்குள் அமர்ந்து சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைவிட, அந்த நேரத்தை முழுமையாக தேவனுக்காக அர்ப்பணிப்பதே சிறந்தது.
6.தேவையற்ற தொடர்புகளைத் தவிருங்கள்:
தேவசமூகத்தில் இருக்கும் நேரத்தில் வெளிநபர்களுடன் தேவையற்ற தொடர்புகளையோ, உரையாடல்களையோ வைத்துக்கொள்ளக் கூடாது.
7.உணர்வுகளுக்கு அடிமையாகாதீர்கள்:
பசி, தூக்கம், அசதி போன்ற உணர்வுகளுக்குக் கீழ்ப்படியாமல், தீர்மானித்த நேரம் முடியும் வரை முழு கவனத்துடனும் விழிப்புடனும் தேவசமூகத்தில் காத்திருக்க வேண்டும்.
8.மகிமையை முழுமையாக தேவனுக்கே செலுத்துங்கள்:
தீர்மானித்த நேரம் முடிந்த பின்பு, பரலோகப் பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையையும் கனத்தையும் செலுத்தி, நன்றியுடன் ஜெபத்தை முடித்த பின்னரே தேவசமூகத்தை விட்டு வெளியே வர வேண்டும்.
9.அவசரநிலையிலும் ஜெபத்துடன் செயல்படுங்கள்:
கூடுமானவரை தேவசமூகத்தை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத அவசரநிலையால் வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதனை பரிசுத்த ஆவியானவரிடம் ஒப்புக்கொடுத்து ஜெபித்து, அவருடைய வழிநடத்துதலை நாடிய பின்பே வெளியே வர வேண்டும். மீண்டும் தேவசமூகத்திற்குள் திரும்பும்போது, பரிசுத்தத்திற்கு தன்னை மீண்டும் அர்ப்பணித்து, ஜெபத்தைத் தொடர வேண்டும்.
10.தவறு ஏற்பட்டால் மனந்திரும்புங்கள்:
இந்தத் தீர்மானங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அதனை ஒரு பாவத்தை அறிக்கை செய்வதைப்போல தேவனிடத்தில் நேர்மையாக அறிக்கை செய்ய வேண்டும். மேலும், அந்தத் தவறு மீண்டும் நிகழாதபடிக்கு தேவனுடைய கிருபையை நாடி, முழுமையாக அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
Share this content:










