தேவன் விரும்பும் தலைவன்
இந்த பூமியில் உள்ள எல்லா இராஜாக்களுக்கும் அதிபதி நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆவார் (வெளிப்படுத்துதல் 1:5). இராஜாக்களைத் தள்ளி இராஜாக்களை ஏற்படுத்துகின்றார் என்று பரிசுத்த வேத வசனங்கள் கூறுகின்றன (தானியேல் 2: 21). தேவனேயன்றி ஒரு அதிகாரமுமில்லையென்றும் பார்க்கின்றோம்.( ரோமர் 13: 1).
இதிலிருந்து பூமியில் உள்ள இராஜாக்களும், அதிகாரங்களும், ஆளுகைகளும் தேவனாலே உண்டாகின்றன என்பதனை மிக மிக ஆழமாக புரிந்துகொள்ளலாம். எனவே, பூமியில் தான் ஏற்படுத்தும் இராஜா எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும், எந்தெந்த தகுதிகள் அவனுக்கு வேண்டும் என்றும் பரலோக தேவன் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். அதையே அவர் விரும்புகின்றார் என்பதும் சத்தியமே.
இந்த செய்தியில் அவர் விரும்பும் தலைவன் யார்? அவர் விரும்பும் தலைமை எது? அவருடைய சித்தம் எது? என்பதனை குறித்து கொஞ்சம் ஆழமாக தியானிக்கலாம்.
இஸ்ரவேலின் முதல் இராஜா சவுல் என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். பரலோக தேவனை முன்னிட்டு சாமுவேல் தீர்க்கதரிசி அவனை அபிஷேகம் பண்ணினான். அவனுடைய இராஜ்ஜியபாரம் நிலைநிற்கவில்லை. முதலில் இராஜ்ஜியபாரத்தையும் கடைசியில் இராஜாங்கத்தையும் இழந்துபோனான். ஏன் அவனுக்கு இப்படி நேரிட்டது? தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவன் விழுந்துபோக காரணம் என்ன? அவனுக்கு இராஜாங்கத்தைக் குறித்தும் இராஜ்யபாரத்தைக் குறித்தும் எந்த அறிவும் அனுபவமும் கிடையாது. மக்களை எப்படி ஆள வேண்டும் என்பதும் தெரியாது. ஏனென்றால், அவனே முதல் இராஜா. இதற்கு முன் எந்த இராஜாவும் இருந்ததில்லை. அரண்மனையின் அனுபவமும் இருந்ததில்லை. இதன் விளைவாக வீழ்ச்சியடைந்தான்.
இரண்டாவதாக பரலோக தேவன் சாமுவேல் தீர்க்கதரிசியைக் கொண்டே தாவீதையும் இராஜாவாக அபிஷேகம் பண்ணுகின்றார். ஆனால், உடனே அவனை இராஜாவாக மாற்றி ஆளுகை செய்ய அனுமதிக்கவில்லை. முதலில் அரண்மனைக்கு அனுப்பினார். ஆயுததாரியாகவும், சேவகனாகவும், யுத்தவீரருக்குத் தலைவனாகவும், ஆயிரம் பேருக்கு அதிபதியாகவும் அவனை மாற்றி இராஜாங்கத்தின் காரியங்களை கற்றுக்கொடுத்தார். அவன் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பின்புதான் இஸ்ரவேலின் இராஜாவாக மாற்றினார். அரண்மனைகளின் அனுபவங்களைக் கற்றுக்கொண்டு இராஜாவாக மாறிய அவனுடைய இராஜ்ஜியமும், இராஜ்ஜியபாரமும் நிலைநின்றது. ஆடுகளின் பின்பாக சென்றவன்தான். அரண்மனை அனுபவங்களைக் கற்றுக்கொண்டதால் வீழ்ச்சியடையவில்லை.
சவுலையும் தாவீதையும் அபிஷேகம் பண்ணின தேவன் ஒருவரே. அபிஷேகம் பண்ணப் பயன்படுத்தின தீர்க்கதரிசியும் ஒருவனே. ஆனால், சவுல் விழுந்துப் போனான் மற்றொருவனாகிய தாவீது நிலைநிற்கின்றான். காரணங்கள் பல இருந்தாலும் அரண்மனையின் அனுபவமும் ஒன்றாகும். பரலோக தேவனே இராஜாக்களைத் தள்ளி இராஜாக்களை ஏற்படுத்தியிருந்தாலும், அனுபவமில்லை என்றால் விழுந்துப் போவது நிச்சயம். ஏனென்றால் அனுபவமில்லாதவர்களால் தேசத்தின் மக்கள் பாதிக்கப்படுவார்கள். தவறான ஆளுகையினாலும் சட்டத்திட்டத்தினாலும் தேசத்தில் பஞ்சம், பட்டினி, கொள்ளை நோய்கள், இயற்கை சீரழிவுகள் ஏற்படும்.
எனவே, தேவன் அரண்மனையின் அனுபவம் இருக்கின்றவர்களைத்தான் இராஜாவாக தொடர்ந்து நிற்கச்செய்வார். அரண்மனையின் அனுபவம் இல்லாதவர்கள் வீழ்ச்சியடைவார்கள்.