×

 பெருமைக்கு எதிர்த்து நிற்போம்

     பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கின்றான் என்று நீதிமொழிகள் 29:5 சொல்லுகின்றது. நாம் தேவனுடைய நாமத்தின் மகிமைக்காக  ஏதாவது நற்கிரியைகளை செய்திருப்போம். அதை கறைப்படுத்தி, கலங்கப்படுத்தி கெடுக்க நினைக்கின்றவன் பிசாசு ஆவான். பல வகையில் கெடுக்க நினைப்பான். அதில் ஒன்று  அந்த நற்கிரியைகளை புகழ்ந்து பேசி நம்மை பெருமைப்படுத்துகின்ற ஆட்களை ஏவி விடுவது.  அவர்கள் தேவனுடைய நாமத்தின் மகிமைக்காக நாம் செய்த நற்கிரியைகளை கண்டு புகழ்ந்து பேசுவார்கள். அப்படி பேசும்போது அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து புறப்படும் ஒரு பெருமையின் ஆவி நம்மை தாக்கும். அது நமக்குள்ளும் நம் சிந்தனைக்குள்ளும் தேவையற்ற பெருமைகளை களைகளாக விதைக்கும்.

 அப்படிப்பட்ட பெருமையான வார்த்தைகளுக்கு இடம் கொடுக்கவில்லையென்றால் பிரச்சனைகள் ஒன்றும் பெரிதில்லை… மாறாக பெருமைக்கு இடம் கொடுத்து  ’நான்’ , ’என் பெலன்’,  ’என் ஞானம்’, ’என் அறிவு’  என்று வீண் வார்த்தையினை நாவினால் பேசும்போது தேவனுடைய கிருபையை விட்டு விலகி சென்றிடுவோம். அந்த நேரத்தில் கீழே தள்ளப்பட்டு பிசாசின் வலையில் சிக்கிவிடுவோம். ஆதலால், இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க வீணான பெருமைகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நலமாகும்.

     சரி.. நேரடியாக நமக்கு முன்பாக மற்ற மனிதர்கள் பெருமைபடுத்தும் விதமாக பேசினால் அதை உடனே உன்னதமானவருக்கு எல்லா மகிமையையும் செலுத்தி மேற்கொண்டு விடலாம்.  மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் நம்மை புகழ்ந்து பேசினால் என்ன செய்வது? அப்படிப்பட்ட வார்த்தைகளை எப்படி மேற்கொள்வது?    ஜெயம் எடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பதாய் யோசிக்கலாம்.  எளிய வழி ஒன்று உள்ளது. தினமும் அதிகாலை நேரத்திலும் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பும் நமக்குரிய எல்லாவற்றிற்கான சகல துதி, கனம், மகிமை, கீர்த்தி, புகழ் எல்லாவற்றையும் திரியேக தேவனுக்கு செலுத்தி ஜெபிக்க வேண்டும். ஒரு முறை அல்ல ஏழு முறை இப்படி மகிமையை சர்வ வல்ல தேவனுக்கு செலுத்த வேண்டும்.  இப்படி செய்யும்போது மறைந்திருந்து தாக்குகின்ற பெருமையின் ஆவிக்கு விலக்கி பாதுகாக்கப்படுவோம். ஆதலால், எல்லா மகிமையும் சர்வவல்ல தேவனுக்கு செலுத்த பழக்கப்படுத்துவோம். பெருமைக்கு எதிர்த்து நிற்போம்.

error: Content is protected !!