×

மறைவான மன்னா

   இருபுறம் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் பெர்கமு சபைக்கு சொல்லும்போது ஜெயம் கொள்கிறவனுக்கு மறைவான மன்னாவை புசிக்க கொடுப்பேன் என்று சொல்லுகின்றார். (வெளிப்படுத்தல் 2:12-17) மன்னா என்பது எல்லாருக்கும் நன்றாக தெரியும். ஆனால், மறைவான மன்னா என்றால் அனேகருக்கு புரியாத விளங்காத காரியமாக இருக்கின்றது. இந்த தீர்க்கதரிசன செய்தியில் பல்வேறு வேத வசனங்களின் ஆதாரத்தோடு, மன்னா என்றால் என்ன? மறைவான மன்னா என்றால் என்ன?  எப்படி மறைவான மன்னா கிடைக்கும்? இதை எப்படி புசிக்கலாம்? என்பதைப் பற்றி பார்க்கலாம். இந்த தீர்க்கதரிசன செய்தியை ஜெபத்துடன் வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் ஆழ்ந்த சத்தியங்களை உங்களுக்கு விளங்கச் செய்வார். கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்.

   உபாகமம் எட்டாம் அதிகாரம் மூன்றாம் வசனத்தில், அவர் உன்னை சிறுமைப்படுத்தி நீ பசியினால் வருத்தி மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல தன்னுடைய வாயிலிருந்து புறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு நீயும் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னை போஷித்தார் என்று கூறுகின்றது. இதை நன்றாக ஆழமாக கவனித்து வாசித்துப் பாருங்கள். நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னா என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் உபாகமும் எட்டாம் அதிகாரம் பதினாறாம் வசனத்தில் பிதாக்கள் அறியாத மன்னாவினால் என்று கூறப்பட்டுள்ளது.

    அதாவது பரலோக தேவன் இஸ்ரேல் மக்களை அறியாத மன்னாவினால் போஷித்தார் என்று வேதவசனம் கூறுகின்றது. ஆனால், இஸ்ரேல் மக்கள் மன்னாவைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். அதன் அளவு என்ன? என்பதையும், அதன் நிறம் என்ன? என்பதனையும், அதன் ருசி என்ன? என்றும் தெளிவாக அறிந்து வைத்திருந்தார்கள். (யாத்திராகமம் 16:31) ஆனால், மோசே தீர்க்கதரிசி எழுதும்போது அறியாத மன்னா என்று எழுதுகின்றான். பழைய ஏற்பாட்டில் முதல் ஐந்து ஆகமங்களையும் மோசே தீர்க்கதரிசிதான் எழுதினான்.

   அப்படியென்றால் பரிசுத்த வேதத்தில் கூறப்பட்டுள்ள அறியாத மன்னா என்றால் என்ன? அதை இஸ்ரேல் மக்கள் எப்படி புசித்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டால்,  மறைவான மன்னா என்றால் என்ன? என்பதையும் அதை எப்படி புசிப்பது? என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். முதலில் அறியாத மன்னா என்றால் என்பதை குறித்து தெளிவாக பார்க்கலாம்.

    வனாந்தரத்தில் இஸ்ரேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ”இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியால் கொல்லும்படி நீங்கள் எங்களை புறப்படப்பண்ணி வனாந்திரத்தில் அழைத்து வந்தீர்களே என்று சொல்லி தீர்க்கதரிசியாகிய மோசே மற்றும் ஆரோனுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.(யாத்திராகமம் 16) அப்பொழுது கர்த்தர் அவர்கள் புசிப்பதற்கு வானத்தின் அப்பமாகிய மன்னாவை புசிக்க கொடுத்தார். இந்த மன்னாவை புசிப்பதற்கு சில கட்டளைகளையும் கொடுத்தார்.

    விடியற்காலம்தோறும் மன்னாவை சேர்க்க வேண்டும்.  வெயில் வந்த பின்பு அது உருகிவிடும். அதேபோல் தலைக்கு ஒரு ஓமர் அளவு மட்டுமே எடுக்க வேண்டும். ஒருவனும் மீதியானதை வைக்க கூடாது.  மீறி வைத்தால் பூச்சி பிடித்து, நாற்றம் எடுத்து விடும். ஆனால், ஆறாம் நாளில் இரண்டு மடங்கு சேர்த்து வைக்க வேண்டும்  போன்ற சில கட்டளைகளை பரலோக தேவன் கொடுத்தார்.

      இப்பொழுது இஸ்ரேல் மக்களுக்கு மன்னா என்றால் என்ன என்பதும், அதன் சுவை ருசி என்ன என்பதும்,  அதை எப்படி புசிக்க வேண்டும் என்பதும் நன்றாக தெரிந்துவிட்டது. காலைதோறும் சென்று தேவனுடைய கட்டளையின்படி மன்னாவை சேர்த்து இயந்திரங்களில் அரைத்தாவது, உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள். அதை அப்பங்களாக சுட்டு புசிப்பார்கள். அவர்கள் மன்னாவை புசிக்க புசிக்க  பரலோக தேவன் அறியாத மன்னாவினால்  போஷித்துக்கொண்டே இருந்தார்.  அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.  

   அவர்கள் புசித்த மன்னா என்பது மாம்சத்துக்குரிய உணவு ஆகும்.  ஆனால் அறியாத மன்னா என்பது ஆவிக்குரிய உணவு ஆகும். தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து மாம்சத்துக்குரிய மன்னாவை புசிக்க வேண்டும்.  அப்படி கீழ்ப்படியும்போது அவர்கள் ஆவிகளின் சில உணர்வுகள் வரும்.  அது அவர்களை பரிசுத்தப்படுத்தும்.  உதாரணமாக நமக்கு சாப்பாடு கிடைக்குமா? என்று அவிசுவாசத்திற்கு இடம் கொடுத்து,  பட்டினியால் கொல்ல இந்த வனாந்திரத்திற்கு கொண்டு வந்தார் என்று  முறுமுறுத்தார்கள்.  அவர்களுக்கு சாப்பாடு கிடைக்குமா என்பது சந்தேகம்.  இப்பொழுது தினமும் காலைதோறும் மன்னாவை பார்க்கும் போது, அவர்களுக்குள் ஒரு உணர்வு வந்து  கண்டிப்பாக காலைதோறும் மன்னா கிடைக்கும் என்ற விசுவாசம் தானாக வந்துவிடும்.  ஆதலால் காலையில்  எழும்பினவுடன் ஆகாரத்தினை குறித்து அவிசுவாசம் இருக்காது. ஒரு கட்டத்தில் சாப்பிடும் ஆகாரத்தினை குறித்து எந்த சந்தேகமும் இருக்காது.

        இதை போல் அநேக  உணர்வுகள் மற்றும்  வார்த்தைகளை  ஆவியில் அவர்களுக்கு கொடுத்து பரலோக தேவன் அவர்களை போஷித்தார்.  இதைதான் அறியாத மன்னா என்று மோசே சொல்லுகின்றான்.  இந்த அறியாத மன்னாவை புசிக்க புசிக்க   ஆவிக்குரிய மனிதன் பெலனடைந்தான்.

         அதேபோல் புதியஏற்பாடு புஸ்தகத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தில் கொடுக்கப்பட்டுள்ள மறைவான மன்னா என்பதும் ஒரு ஆவிக்குரிய உணவாகும்.  இது புசிக்கின்றவர்கள் தவிர மற்ற யாருக்கும் தெரியாது.  இதை ஜெயம்கொள்கிறவனுக்கு தருவேன் என்று பரலோக தேவன் வாக்கு கொடுத்துள்ளார்.

  சரி  மறைவான மன்னாவை எப்படி தருவார்? எப்படி புசிக்கலாம்? மறைவான மன்னா என்பது மறைந்திருக்கின்ற மன்னாவாகும்.  புசிக்கின்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.  எனவே,  புசிக்கின்றவர்கள் மட்டுமே இதை உணர்ந்துக்கொள்ள முடியும்.  வாழ்க்கையில் ஏற்படும் சில சூழ்நிலைகள் மூலமாக இந்த மன்னாவை பரலோக தேவன் தருவார்.  உதாரணமாக நீங்கள் கோபப்படுபவராக இருந்திருந்து இரட்சிக்கப்பட்டிருக்கலாம். உங்களுக்கு பயங்கரமாக கோபம் வரலாம்.  இப்பொழுது ஜெபித்து ஜெபித்து  கோபத்தினை  மேற்கொண்டிருப்பீர்கள்.  ஒரு நேரத்தில் எனக்கு கோபம் இல்லை; கோபத்தினை மேற்கொண்டேன் என்று சாட்சி சொல்லியிருப்பீர்கள்.  ஒருநாள் எரிச்சல்படும்படியான சூழ்நிலைகள் வரும். அந்நேரத்தில் நீங்கள் கோபப்பட்டு விடுவீர்கள்.  இப்பொழுது உங்களுக்குள் ஒரு உணர்வு வரும்.  ”நீ  இன்னும் கோபப்படுகின்றாய்; இன்னும் கோபம் உன்னை விட்டு நீங்கவில்லை; இன்னும் கோபத்திலிருந்து விடுதலைப்பெற வேண்டும்.” என்பதாக ஓர் உணர்வு வரும். இதுதான் மறைவான மன்னவாகும். இது வேறு யாருக்கும் தெரியாது. உங்களுக்கு மட்டும்தான் தெரியும். புசிக்கின்றவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இப்படி பரலோக தேவன் உங்களுக்குள்  இருக்கின்ற மறைவான பாவத்தை சூழ்நிலைகள் மூலமாக உணர்த்துவது மறைவான மன்னா ஆகும்.  அதை நீங்கள் அறிக்கை செய்து ஜெபிக்க ஜெபிக்க  பரிசுத்தமாகிகொண்டிருப்பீர்கள். அது உங்களை பரிசுத்தப்படுத்தும்.

  இப்படித்தான் பரலோகதேவன் மறைவான மன்னாவை புசிக்க கொடுப்பார். சூழ்நிலைகள் மூலமாக பேசுவார்.  இதை கவனித்து தினமும் புசிக்க புசிக்க  பரிசுத்தத்தின் மேல்  பரிசுத்தம் அடைந்து பரலோக  இராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம்.

Share this content:

error: Content is protected !!