நூற்றுக்கு அதிபதியின் பாவம்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வீட்டுக்குள் பிரவேசிப்பது என்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம். அவர் மேல் உள்ள பரலோகப் பிரசன்னம் வீடு முழுவதையும் நிரப்பும். வீட்டிலுள்ள பொருட்களையும் நிரப்பும். ஏன் வீட்டின் சுவரை கூட அவருடைய பிரசன்னம் தொடும். அது மாத்திரமல்ல அவரோடுக்கூட பதினாயிரம் லேகியோனுக்கும் அதிகமான தூதர்களின் படை வரும். எனவே, அசுத்த ஆவிகளால் அங்கே நிற்கவே முடியாது. வீட்டுக்குள் பிரவேசிக்க கதவை திறந்து அனுமதி கொடுத்தாலே போதும், உள்ளே வந்து போஜனம் பண்ண விருப்பமாக இருக்கின்றார். (வெளி 3: 20). இது அவருடைய இருதய விருப்பமாகும். மாம்சத்தில் ஊழியம் செய்த நாட்களில் அநேகருடைய வீடுகளுக்குள் பிரவேசித்தார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த நாட்களில் கப்பர்நகூமில் பிரவேசித்த போது, நூற்றுக்கதிபதி ஒருவன் திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்டு, கொடிய வேதனைப்படுகின்ற தன்னுடைய வேலைக்காரனுக்காக விண்ணப்பம் செய்ய அவரிடத்தில் வந்தான். பொதுவாக வேலைக்காரர்கள் வியாதிப்பட்டால் கைவிடுகின்ற எஜமான்கள்தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய வேலைக்காரனுக்காக விண்ணப்பம் செய்ய நூற்றுக்கதிபதி வந்ததை பார்த்த, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நான் வந்து அவனை சுகமாக்குகின்றேன் என்று கூறினார்.(மத்தேயு 8:5-13)
நூற்றுக்கு அதிபதியோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வீட்டிற்கு வருவதை தடுத்து, ”நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க பாத்திரன் அல்ல… ஒரு வார்த்தை மாத்திரம் சொன்னால் போதும்… என் வேலைக்காரன் சொஸ்தமாவான்” என்று கூறினான். அவன் அரசாங்கத்தின் அதிகாரி. எனவே, அதிகாரமுள்ள வார்த்தை எப்படி கிரியை செய்யும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.
எப்படியெனில் நூற்றுக்கு அதிபதிக்கு மேல் பெரிய பெரிய அதிகாரிகள் இருக்கின்றார்கள். அவனுக்கு மேல்நிலையில் அதிகாரம் உள்ள ஆளுகை இருக்கின்றது, அவன் அந்த அதிகாரத்துக்கு கீழ்ப்பட்டிருந்தும் ஒரு சேவகனை போ என்று கூறினால் போதும். அவன் போகின்றான். மற்றொருவனை நீ வா என்று சொன்னால் போதும். அவன் வருகின்றான். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே எல்லா அதிகாரத்தின் உச்சம். அவருக்கு மேல் வந்த அதிகாரமும் கிடையாது. அவர் சொல்லும் போது எப்படிப்பட்ட வியாதியும் சரியாகும் என்று அறிந்திருந்தான். எனவேதான் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் என்று கூறினான்.
இதைக் கேட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆச்சரியப்பட்டார். இஸ்ரவேல் மக்களுக்குள் இப்படிப்பட்ட விசுவாசத்தினை காணவில்லை என்று கூறினார். நூற்றுக்கு அதிபதியை பார்த்து நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று கூறினார். அந்த நொடியில் வேலைக்காரன் சுகமானான். நூற்றுக்க அதிபதியின் ஆச்சரியப்படத்தக்க விசுவாசம் திமிர்வாதக்காரனை குணமாக்கியது. ஆமென்… அல்லலூயா… ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ அவனுடைய வீட்டுக்குள் செல்லவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வீட்டுக்குள் வரும் ஆசீர்வாதத்தினை நூற்றுக்கு அதிபதி பெற்றுக்கொள்ளவில்லை.
பரிசுத்த வேதத்தில் ஆயக்காரர்களுக்கு தலைவனும் ஐசுவரியவானுமாய் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதனைக் குறித்து பார்க்கலாம். அவனுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவரோ என்று பார்க்க விரும்பினான். முன்னதாக சென்று காட்டத்தி மரத்தில் ஏறினான். அதை அறிந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சகேயுவே, நீ சீக்கிரமா இறங்கி வா, இன்றைக்கு உன் வீட்டில் தங்க வேண்டும் என்று கூறினார். அவன் இறங்கி சந்தோஷத்தோடு அழைத்துக் கொண்டு சென்றான்.(லூக்கா 19:1-10) நீர் என் வீட்டுக்கு வரவேண்டாம் என்று தடுக்கவில்லை.
சொல்லப் போனால் நூற்றுக்கு அதிபதியை விட மிகப் பாவியான மனுஷன் சகேயுதான். நூற்றுக்கதிபதி தன் வேலைக்காரனுக்காக பரிதாபப்பட்டவன். ஆனால் சகேயு அநேகரிடத்தில் அநியாயமாக பொருட்களை பறித்தவன். ஆனாலும், நீர் என் வீட்டிற்கு வருவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று நூற்றுக்கதிபதி சொன்னது போல் சொல்லாமல் சந்தோஷத்தோடு அழைத்துக் கொண்டு சென்றான்.
அவன் செல்லும்போதே தன் பாவத்தை உணர்ந்து, ஆண்டவரே.! என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கின்றேன். நான் ஒருவனிடத்தில் அதிகமாக வாங்கி இருந்தால் நாலத்தனையாக திரும்ப செலுத்துகின்றேன் என்று கூறினான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்றும், இவனும் ஆபிரகாமின் குமரனாய் இருக்கிறானே என்றும் கூறினார்.
பொதுவாக ஐசுவரியவான்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது கடினமான ஒன்றாகும். அவர்கள் இரட்சிக்கப்படுவது அரிது. இதைத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூட ஐசுவரியவான்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாக இருக்கும் என்று கூறினார். (மத்தேயு 19:23-26) இதற்கும் மீறி ஐசுவரியவான்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்றால் அது மனிதர்களால் கூடாது. தேவனால் மட்டுமே முடியும்.
சகேயு ஐசுவரியவானாக இருந்தான். அவன் இரட்சிக்கப்படுவது என்பது சாதாரண காரியம் அல்ல. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வீட்டிற்குள் வருவதை அவன் விரும்பினான். மனிதர்களால் கூடாத இரட்சிப்பை பெற்று சுபாவத்தில் மாற்றத்தை பெற்றான். அவன் வீடே இரட்சிக்கப்பட்டது. ஆனால், நூற்றுக்கு அதிபதிக்கோ இந்த ஆசீர்வாதம் கிடைக்கவில்லை. நான் பாத்திரன் அல்ல என்று சொல்லி வீட்டிற்கு வருவதை தடை செய்ததினிமித்தம், தன் வேலைக்காரன் மட்டுமே சொஸ்தமானான். நூற்றுக்கு அதிபதிக்கோ எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. கோடி ரூபாய் கொடுத்தால் கூட சுபாவத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் பெற முடியாது. அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வீட்டிற்கு வருவதினால் மட்டுமே கிடைக்கும். அப்படிப்பட்ட பெரிய ஆசீர்வாதத்தினை இழந்து விட்டான்.
சரி… எது அவனுடைய ஆசீர்வாதத்தினை தடுத்தது? பாவியான சகேயுவின் பெயர் பரிசுத்த வேதத்தில் எழுதப்பட்டிருக்க அவனுடைய பெயர் பரிசுத்த வேதத்தில் எழுதப்படவில்லை ஏன்? நூற்றுக்கு அதிபதியினிடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஆச்சரியப்படத்தக்க பெரிய அளவிலான விசுவாசம் இருந்தது. ஆனால், நான் பாவி என்றும், எனக்கு தகுதி இல்லை என்றும் குற்றமனசாட்சியும் கூட இருந்தது. இருதயத்திற்குள் மறைந்திருந்தது. அது வார்த்தையாக வெளிப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வீட்டிற்குள் வருவதை தடை செய்தது.
இன்றைய நாட்களிலும் கூட அநேகருக்கு பெரிய அளவிலான விசுவாசம் இருக்கும். விசுவாசத்தில் வளர்ந்திருப்பார்கள். ஆனால், நான் பாவி என்றும்.. நான் பாத்திரன் அல்ல என்றும், சொல்லி தன்னைத்தானே பாவியாக நியாயம் தீர்ப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவனால் ஒன்றும் பண்ண முடியாது. இதனால் பெரிய அளவிலான ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொள்ளாமல் சின்ன சின்ன அற்புதங்களை மட்டுமே காண்பார்கள்.
எனவே, தேவனுடைய பிள்ளைகள் நான் பாத்திரன் அல்ல என்ற குற்ற மனசாட்சிக்கு இடம் கொடுக்காமல், பாவத்தினை அறிக்கை செய்தால் போதும். பரலோக தேவன் பெரிய அற்புதங்களை செய்வார். மனிதர்களால் கூடாத காரியத்தில் கூட அற்புதங்கள் நடக்கும்.
Share this content:



