×

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே…!

   கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக நடத்தப்படும் மெகாவேதாகமம் எழுதும் தேர்விற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். தொடர்ந்து ஏழாவது வருடமும்(2026) இந்த தேர்வினை நடத்துவதற்கு பரலோக தேவன் கிருபை பாராட்டியுள்ளார். அவருக்கே சகல, துதி, கனம், மகிமை, கீர்த்தி, புகழ்ச்சி உண்டாகட்டும். பரிசுத்த வேதத்தினை எழுதும் இந்த தேர்வு எப்படி ஆரம்பிக்கப்பட்டது? எந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது? இது கடந்து வந்த பாதைகள் எப்படி இருந்தது? இந்த தேர்வினை குறித்த பரலோக தேவனுடைய தரிசனம் என்ன என்பதனை இதில்  உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

     பரிசுத்த வேதத்தின் அறிவை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ உலகில்  கால காலமாக வேதாகம வினாடி-வினா, Bible Quiz,  போன்ற பல வேதாகமம் தேர்வுகள் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் 2019 ஆம் வருடமும் இந்த ஊழியத்தின் மூலமாகவும் இதேபோல் வேதாகம தேர்வு நடத்தப்பட்டது. முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட வேதாகம தேர்வு இதுதான். இதில் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் வெற்றி பெறுகின்றவர்களை ஊக்குவிப்பதற்காக அதிக விலையுள்ள  மொபைல் போன் பரிசாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

       அநேக தேவனுடைய பிள்ளைகள் ஆர்வமுடன் இந்த தேர்வினை உண்மையாக எழுதினார்கள். சிலர் Internet மூலமாக Google உதவியுடன் விடைகளை குறுக்கு வழியில் கண்டுபிடித்து எழுதினார்கள். இதனால் பைபிள் Exam-ஐ குறித்த தேவனுடைய திட்டம் பாதிக்கப்பட்டது. வேதாகம தேர்வு நடத்துவது வீண் வேலை என்பது போல் தோன்றியது. எனவே, இனி இப்படிப்பட்ட எந்த தேர்வும் நடத்த வேண்டாம் என்று தீர்மானத்தோடு தேவசமூகத்தில் அமர்ந்திருக்கும் போது,  2019 ஆம்  வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வேதாகம தேர்வினை நடத்தாமல் வேதாகமம் எழுதும் தேர்வினை வரும் ஆண்டுகளில் நடத்தும்படியாக ஒரு திட்டத்தினை பரிசுத்த ஆவியானவர் கொடுத்தார்.

        அதன்படி 2020 ஆம் வருடம் வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.    வேதாகம தேர்வு என்பது வேறு… வேதாகமம் எழுதும் தேர்வு என்பது வேறு…  வேதாகம தேர்வு என்பது எல்லாருக்கும் நன்றாக தெரியும். வேதத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில் எழுத வேண்டும். ஆனால், வேதாகமம் எழுதும் தேர்வு என்பது எப்படி நடத்த வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன?  என்று தேவசமூகத்தில் அமர்ந்திருந்த போது, பரிசுத்த  வேதாகமத்தை சொந்த கையால்  எழுதி, அதை தியானிக்கும் பழக்கத்தினை தேவனுடைய பிள்ளைகளுக்குள் உருவாக்க வேண்டும்  என்பதுதான் இந்த தேர்வினைக்குறித்த நோக்கம் என்று பரலோக தேவன் வெளிப்படுத்தினார். அதற்காக கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை பரிசுத்த  வேதாகமத்தை பார்த்து, சொந்த கையால் எழுதி, அனுப்ப   வேண்டும் என்றும்,  அதை Correction பார்த்து சரியான நபர்களை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுகின்றவர்களுக்கு நல்ல மதிப்புள்ள பரிசுகளை வழங்க வேண்டும் என்றும் பரிசுத்த ஆவியானவர் கூறினார்.

     கர்த்தருடைய வார்த்தையின் படி 2020 ஆம் வருடம் ஜனவரி மாதம் 3ஆம் தேதி வேதாகமம் எழுதும் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. புதிய ஏற்பாட்டில் உள்ள சுவிசேஷ புத்தகங்கள் மற்றும், வெளிப்படுத்தின விசேஷத்தினை பார்த்து எழுத வேண்டும் என்றும், பிழையில்லாமல் எழுதி வெற்றி பெறுகின்றவர்களுக்கு ஒரு சவரன் தங்கம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்தவ உலகில் முதன்முறையாக இப்படிப்பட்ட அறிவிப்புகளை மக்கள் பார்த்தனர். அது எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், வேதாகமத்தை பார்த்து சொந்த கையால் எழுத வேண்டும் என்பதும், அதுமாத்திரமல்ல ஒரு சவரன் தங்கம் பரிசு என்ற அறிவிப்பும், எல்லாவற்றுக்கும் மேலாக இதற்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது. அனுமதி முற்றிலும் இலவசம் என்பதனை பார்த்த  அநேக தேவனுடைய பிள்ளைகள் ஆச்சரியப்பட்டார்கள். ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியமடைந்தார்கள். அநேகர் பதிவு செய்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

       உற்சாகமாக எழுதிக் கொண்டிருக்கும்போதே 2020 ஆம் வருடம் மார்ச் 25ஆம் தேதி கொரோனா பாதிப்பு நிமித்தம் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற உத்தரவு அரசாங்க மூலமாக பிறப்பிக்கப்பட்டது. உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கினார்கள். கொரோனா பாதிப்பு என்ற செய்தியும் ஆச்சரியம்… வீட்டைவிட்டு வெளியே யாரும் வரக்கூடாது என்ற அரசாங்க உத்தரவும் ஆச்சரியம்… ஆச்சரியத்திற்கே ஆச்சரியம் வேதாகமம் எழுதும் தேர்வும் அதற்கான பரிசும். வீட்டிற்குள்ளே இருங்கள் யாரும் வெளியே செல்லாதீர்கள் பரிசுத்த வேதாகமத்தை எழுதுங்கள்; ஒரு சவரன் தங்கத்தினை பரிசாக வெல்லுங்கள் என்பதே அந்நாட்களில் உற்சாகமூட்டும் வரிகளாக இருந்தன. அனைத்து Social Media –லும் அனுப்பப்பட்டன.  அந்த நாட்களை தேவனுடைய பிள்ளைகள் பிரயோஜனமாக பயன்படுத்தினார்கள்.  

        கொடுக்கப்பட்டுள்ள விதிமுறையின்படி வீட்டில் இருந்து தேர்வினை எழுதி டிசம்பர் 15-க்குள் கொரியரில் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைத்தார்கள். ஆட்களை நியமனம் செய்து, வந்த எல்லா நோட்டையும் திருத்தினோம்.  தகுதியான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. இன்னும் பரிசு மட்டும் கொடுக்க வேண்டும்.  கிறிஸ்தவ வரலாற்றிலே முதன்முறையாக வேதாகமத்தை எழுதுபவர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்ததினால் எப்படி பரிசினை கொடுப்பார்கள்? என்றும் இவர்கள் பதிவு கட்டணம் இல்லாமல் இலவசமாக நடத்துகின்றார்கள் உண்மையாகவே பரிசினை கொடுப்பார்களா? இது உண்மையா? இல்லை பொய்யா?  என்றும் அநேகர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லாருடைய எதிர்பார்ப்பிலும் கர்த்தருடைய நாமத்தின் மகிமை விளங்கும் விதமாக, கர்த்தருடைய மகா பெரிய கிருபையினால் ஒரு சவரன் தங்கத்தினை பரிசாக கொடுக்க பரலோக தேவன் கிருபை பாராட்டினார். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவரின் வீடுகளுக்கே சென்று பரிசினை நேரில் கொடுத்தோம். தேவனுடைய நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும்.

       2020 ஆம் வருடம் நடத்தப்பட்ட வேதாகமம் எழுதும் தேர்வு அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்ததினாலும்,  நிறைய தேவனுடைய பிள்ளைகள் வேதாகமத்தினை எழுதி பாவ, சாப, மாந்தீரீக மற்றும் செய்வினை  கட்டுகளில் இருந்து விடுதலை பெற்று கொண்டதினிமித்தமும், 2021 ஆம் வருடமும் இத்தேர்வினை நடத்த  பரலோக தேவன் ஆனையிட்டார். அதன்படி 2021 ஆம் வருடமும் நடத்தப்பட்டது. அதுவும் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்தது. எனவே, தொடர்ந்து நடத்த பரலோக தேவன் விரும்பினார். அதன்படி 2020 முதல் 2025 வரை தொடர்ந்து எல்லா வருடங்களும் நடத்தப்பட்டது.  இப்பொழுது ஏழாவது முறையாக 2026 ம் வருடமும் நடத்தப்படுகின்றது. இதில் பரலோக தேவன் தம்முடைய கிருபைகளையும் மகிமையும் விளங்கச்  செய்கின்றார்.   பரலோக தரிசனத்தின்படி இந்த தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டதால் அநேகர் எழுதினார்கள். பரலோக தேவன் கொடுக்கும் ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொண்டார்கள்.  வெற்றி பெறுகின்றவர்களுக்கு ஊழியத்தின் மூலமும் சிறப்பான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

        இந்த வேதாகமம் எழுதும் தேர்வினை எழுதி பரிசினை பெற்றவர்கள் மிக சிலர்தான். ஆனால்,  பரலோக தேவனுடைய ஆசீர்வாதத்தினையும், அவர் கொடுக்கும் விடுதலையையும், பெற்றவர்கள் மிக மிக அதிகம். இந்த தேர்வினை எழுதியதன் மூலம் கர்ப்பத்தின் கனிகளை பெற்றவர்கள், திருமண தடை உடைக்கப்பட்டு நல்ல திருமண வாழ்க்கையினை பெற்றவர்கள், வாடகை வீட்டிலிருந்து சொந்தமாக வீட்டினை வாங்கியவர்கள், நெடுநாள் வியாதியில் இருந்து விடுதலைப் பெற்றவர்கள் அநேகர்.

     இதை வாசிக்கின்ற உங்களை அன்புடன் இந்த தேர்வினை எழுத அழைக்கின்றேன்.  பரிசுத்த வேதத்தினை சொந்த கரத்தினால் எழுதுங்கள். பரிசுத்த  வேதாகமத்தை சொந்த கையால்  எழுதி, அதை தியானிக்கும் பழக்கத்தினை கொண்டு வாருங்கள்.  பரலோக தேவன் கொடுக்கும் ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொள்ளுங்கள்.

error: Content is protected !!