×

பாவத்தினை கொண்டு வரும் ஆவிக்குரிய அனுபவம்

    முந்தின நாட்களில் பரலோக தேவனுடைய சித்தத்திற்கு மாறாக ஏதாவது பாவம் செய்திருப்போம். கிருபையாக அவர் நம்மை பாதுகாத்து, பாவத்திலிருந்து விடுதலைத் தந்திருப்பார். ‌ இதினிமித்தம் பெரிய பிரச்சினைகள் வராதபடிக்கு பாதுகாத்திருப்பார். இந்த அனுபவத்தினைக் கொண்டு, பின்நாட்களிலும் பாவம் செய்தாலும், துணிகரமாக பாவம் செய்தாலும் தப்பலாம் என்று நினைக்கக் கூடாது. அது பெரிய ஆபத்தினைக் கொண்டு வரும்.  அது எப்படி என்பதனை தாவீதின் வாழ்க்கையிலிருந்து இந்த தீர்க்கதரிசன செய்தியில் விரிவாக தியானிக்கலாம். இது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

     தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனான தாவீது, பெலிஸ்தியர்களின் வீரனாகிய கோலியாத்தை வீழ்த்தினான். இஸ்ரேல் படையே அவனுக்கு பயந்து நடு நடுங்க, தாவீது மட்டுமே எளிமையாக அவனை கொன்றுப் போட்டான். எப்படி வீழ்த்தினான்? எங்கிருந்து அவனுக்கு இந்த தைரியம் கிடைத்தது?

        தாவீது ஆடுகளை மேய்க்கின்ற மேய்ப்பனாக இருக்கும் போது, வனாந்தரத்தில் கொஞ்சம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். ஒருமுறை சிங்கமும், மறுமுறை கரடியும் வந்து மந்தையில் இருக்கின்ற ஆடுகளைப் பிடித்துக் கொண்டு சென்றது. தாவீது அதைத் தொடர்ந்து சென்று, அதன் தாடையைப் பிடித்து அடித்து கொன்றுப் போட்டு ஆடுகளை தப்புவித்தான். இந்த அனுபவம் அவனுக்கு விசுவாசத்தினை தூண்டியது. விசுவாசத்தினை அதிகரிக்க செய்தது. 

    அந்நாட்களில் இஸ்ரவேலின் இராஜாவாக இருந்த சவுலிடம், அந்த சிங்கத்தையும் அந்த கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன். விருத்தசேதனமில்லாத இந்த பெலிஸ்தியன் அவைகளில் ஒன்றைப் போல் இருப்பான் என்று தன்னுடைய விசுவாசத்தினை மிக உறுதியாக அறிக்கைச்செய்தான். அதன்படி வெறும் கூழாங்கற்களை மட்டுமே கொண்டு பெலிஸ்தியர்களின் அரக்கனாகிய கோலியாத்தை வீழ்த்தி, அவனுடைய பட்டயத்தை எடுத்து அவனைக் கொன்றுப் போட்டான். இஸ்ரவேலின் தேவனுடைய நாமம் மகிமைப்பட்டது.(1 சாமுவேல் 17)

        அதே நேரத்தில் தன்னுடைய படை வீரனாகிய உரியாவை கொன்றுப் போட்டு பத்சேபாளைத் தனக்கு மனைவியாக எடுத்துக் கொண்டான். இது தேவனுடைய பார்வையில் பாவமாக இருந்தது. எப்படி பத்சேபாளைத் தனக்கு எடுத்துக் கொண்டான்? உரியாவைக் கொலைச் செய்ய எப்படி தைரியம் வந்தது?

           நாபால் என்ற ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய மனைவிக்கு அபிகாயில் என்று பெயர். இவள் மகாபுத்திசாலியும் ரூபவதியுமாய் இருந்தாள். ஆனால், நாபாலோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்.  சவுலுக்குப் பயந்து வனாந்தரத்தில் காத்திருந்த நேரத்தில் தாவீது அவனுக்கு நன்மை செய்தான். ஆனால், அவனோ நன்மைக்கு பதிலாக தீமை செய்தான். அவனைப் பழிவாங்க தாவீது விரும்பினான். ஆனால், பரலோக தேவன் அதைத் தடுத்து, நாபாலை வாதித்தார். பத்து நாளைக்குப் பின்பு அவன் செத்தான். (1 சாமுவேல் 25)

      இதை கேள்விப்பட்ட தாவீது ஆட்களை அனுப்பி அபிகாயிலை அதாவது நாபாலின் மனைவியாகிய அபிகாயிலை தனக்கு மனைவியாகக் எடுத்துக் கொண்டான். தேவனே நாபாலைக் கொன்றார். மேலும், அபிகாயிலை தனக்கு மனைவியாக எடுக்கும் போதும் அதைத் தடுக்கவில்லை. இந்த அனுபவம் அவனுக்கு ஒரு எண்ணத்தினை கொடுத்தது. பத்சேபாளைத் தனக்கு மனைவியாக எடுக்க வேண்டிய சூழல். எனவே, உரியாவைக் கொன்று போட்டு பத்சேபாளை எடுத்துக் கொண்டாலும் பரலோக தேவன் ஒன்றும் சொல்ல மாட்டார். மாறாக, Support ஆக இருப்பார் என்று நினைத்தான். அதனால், துணிந்து பட்டயத்தினாலே உரியாவை கொன்றுப் போட்டான். ஆனால், பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டான். அவன் நினைத்தது போல் தேவன் அவனுக்கு Support ஆக இல்லை. இந்த அனுபவம் அவனுக்கு ஆசீர்வாதத்தினை அல்ல ஆபத்தினைக் கொண்டு வந்தது. பின்நாட்களில் ரொம்பவே கஷ்டப்பட்டான். (2 சாமுவேல் 12)

     இந்த இரண்டு சம்பவங்களையும் நாம் தியானிக்கும் போது, முந்தின நாட்களின் அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் சுபாவம் தாவீதுக்கு உள்ளது என்பதனை புரிந்துக் கொள்ளலாம். ஆவிக்குரிய காரியங்களில் முந்தின நாட்களில் அனுபவங்கள், அற்புதங்கள் மற்றும் வழிநடத்துதல்களைக் கொண்டு வளர முடியும். அது விசுவாசத்தினைக் கொடுக்கும். உதாரணமாக, முந்தின நாட்களில் பெரிய ஆபத்து வந்திருக்கும். அதிலிருந்து பரலோக தேவன் அற்புதங்களைச் செய்து பாதுகாத்திருப்பார். அந்த அனுபவத்தினை நினைவுப்படுத்தி, அதன் வழிநடத்துதல்களைக் கொண்டு பின்நாட்களிலும் பிரச்சனைகளிலிருந்து விடுதலைப் பெறலாம். 

      அதே நேரத்தில் முந்நாட்களில் ஏதாவது பாவம் செய்திருப்போம். அல்லது பாவத்தினைக் கொண்டுவரும் காரியமாக இருக்கலாம். பரலோக தேவன் அதில் நமக்கு Support ஆக  இருந்து ஒரு Solution தந்திருப்பார். பிறனுடைய மனைவியை எடுப்பது என்பது  பரிசுத்த வேதத்திற்கு அப்பாற்பட்ட காரியம். ஆனாலும், அதில் ஒரு Solution ஐ தந்திருப்பார். அதை அனுபவமாக எடுத்துக்கொண்டு,  அந்த அனுபவத்தினைக் கொண்டு பின் நாட்களில் பாவம் செய்து  தப்பித்துவிடலாம் என்று நினைக்கக் கூடாது.  அது பெரிய ஆபத்தினைக் கொண்டு வரும். எனவே, இக்காரியங்களில் தேவனுடைய பிள்ளைகள் எச்சரிக்கையாக இருங்கள். 

முந்தின நாட்களின் ஆவிக்குரிய அனுபவங்கள் பரிசுத்த காரியத்திற்கு மட்டுமே ஆசீர்வாதமாக இருக்கும். பாவக்காரியங்களுக்கு அல்ல.

Share this content:

error: Content is protected !!